பக்கங்கள்

வியாழன், 17 மார்ச், 2022

ஏமி கார்மைக்கேல் (Amy Carmichael) in Tamil

 ஏமி கார்மைக்கேல் (Amy Carmichael)


ஏமி கார்மைக்கேல் அயர்லாந்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1867 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ”டேவிட் கார்மைக்கேல்-கேத்திரின்” தம்பதியினருக்கு முதல் மகளாக பிறந்தார். போதகரின் மகளான ஏமி கார்மைக்கேல் தனது 13வது வயதில் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தன் சிறு வயதிலேயே ஏமி கார்மைக்கேலுக்கு தன் சகோதரனின் கண்களைப்போல தன்னுடைய பழுப்பு நிற கண்களும் நீல நிறமாக மாற வேண்டும் என ஜெபித்தார். ஆனால் அது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
ஏமி கார்மைகல் தனது 18 வயதில் தன் தகப்பனாரை இழந்தார். அதன்பின் குடும்பத்தில் கடும் பண நெருக்கடி ஏற்பட்டதால் பெல்ஃபாஸ்ட் என்ற இடத்திற்கு குடி பெயர்ந்தனர். ஏமி கார்மைக்கேல் சேரிகளில் உள்ள பெண்களோடு இணைந்து தொழிற்சாலைகளில் வேலை செய்தார். பின்னர் கேஸ்விக் என்ற ஒரு இயக்கத்தை ஏற்படுத்தினார். இதில் வாழ்க்கையின் நிலை மற்றும் கடவுளின் அன்பை கற்றுக்கொடுத்தார். ஒரு நாள் “திரு.மூடி” என்பவரின் செய்தியின் மூலம் ஆண்டவருக்காக உண்மையாக தன்னை அர்பணித்தார்.
1892ல் ஏமி கார்மைகல் 24 வயதான போது கேஸ்விக் குழுவிலிருந்து மிஷனெரியாக ஜப்பான் சென்றார். அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ள மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை சென்றார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பினார்.
இங்கிலாந்து சென்ற ஏமி கார்மைக்கேல் ஒராண்டுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தார். தனது 28ம் வயதில் தனது சரீர பலவீனம் மற்றும் குழப்பங்களால் சோர்வுற்று நம்பிக்கையற்ற நிலையில் சென்னை வந்தார்.
இங்கிலாந்து திருச்சபை, இந்திய ஊழியத்திற்காக அவரைத் தெரிந்தெடுத்து அனுப்பி வைத்தது.
1895-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி ஊழியர் ஏமி கார்மைக்கேல் இந்திய மண்ணில் தமது காலடியை பதித்தார். திருநெல்வேலியில் ஊழியம் செய்து வந்த மிஷனரி போதகர்.தாமஸ் வாக்கர், தமிழில் நல்ல புலமை உடையவராகக் காணப்பட்டார்.
நீங்கள் திருநெல்வேலிக்கு வந்தால், உங்களுக்கு நானே தமிழ் கற்றுத் தருகிறேன் என்றார். ஏமிக்கு இந்த ஆலோசனையும் அழைப்பும் அதிக மகிழ்ச்சியை அளித்தது. தமிழ் படிப்பதற்காக சிறிது நாட்களில் திருநெல்வேலி வந்து சேர்ந்தார்.ஏமிக்கு இருந்த ஊழிய வாஞ்சையால் அவர் விரைவில் தமிழ் மொழியைப் படித்துவிடத் துடித்தார்.ஏமி கார்மைக்கேல் தமிழ்மொழியை மிகுந்த ஆர்வத்துடன் படித்து வந்தார்.

Amy Carmichael
Amy Carmichael




போதகர்.தாமஸ் வாக்கர் தனது மாவட்டத் தலைவர் பதவியை விட்டு நேரடியாக கிராம ஊழியத்தில் ஈடுபடப் புறப்பட்டார்.பண்ணைவிளையைத் தமது ஊழியத்தளமாக வைத்துக் கொண்டு 1897 –ம் ஆண்டு ஊழியத்தைத் தொடங்கினார். இந்தக் கிராம ஊழியத்தில் உதவிக்கு வருமாறு அவர் ஊழியர் ஏமியையும் அழைத்தார். இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் ஏமி.
போதகர்.தாமஸ் வாக்கர், ஏமியை தங்கச்சி தங்கச்சி என்று அழைக்க ஏமி போதகர்.தாமஸ் வாக்கரை, அண்ணாச்சி அண்ணாச்சி என்று அழைக்க தமிழ் மக்களிடையே ஊழியம் வேரூன்றத் தொடங்கியது. பண்ணைவிளை பங்களா, தலைமையகமாக இயங்கினது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று துடிப்புடன் இருந்த ஏமி, ஊழியத்திற்கு ஏற்றபடி தமது உடையையும் மாற்றிக் கொண்டார். தழையத் தழைய சேலைகட்டி தமிழ்ப்பெண்ணாகவே காணப்பட்டார். பண்ணைவிளை வட்டார தமிழ்ப் பெண்கள் இதை வரவேற்றார்கள். அவர்கள் ஏமியை அம்மா.. என்று அன்பொழுக அழைத்தார்கள்.
அம்மா ஏமி கார்மைக்கல் அவர்களுடைய ஊழியம் நாளுக்கு நாள் வளர்ந்து ஒளி வீசத் தொடங்கினது. அம்மாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் பெண்கள் இருந்து வந்தார்கள்.
இந்த பெண்கள் கூட்டம், நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லேயாள், செல்லமுத்து, பொன்னம்மாள் இப்படி பலர் இருந்தார்கள். பண்ணைவிளை வட்டார மக்கள் அம்மாவை முயல் மிஸி என்றும், பிள்ளை பிடிக்கிற மிஸி என்றும் அழைத்தார்கள்.
போதகர்.தாமஸ் வாக்கர் தம்பதியும்,அம்மா ஏமி கார்மைக்கேலும் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள். “கூட்டத்தில் ஒரு பதினொரு வயது சிறுமி. அவள் பெயர் அருளாயி. அவள் பார்வை, சேலையணிந்து அருளோவியமாக நின்று கொண்டிருந்த அம்மா மேல் அப்படியே நிற்கிறது. “ஆண்டவரே ! நான் உம்முடைய பிள்ளை, என்னை நீர் அந்தப் புடவை கட்டிய அம்மாவிடம் கொண்டு சேர்த்து விடும்” என்று ஜெபித்தாள்.அருளாயி சிறுமியாக இருந்ததால் அவளைத் தங்களுடன் வைத்துக்கொள்வதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. சிறிது நாட்களில் அவளது பெற்றோரின் சம்மதத்துடன் ஏமி கார்மைக்கேலிடம் சேர்ந்துகொண்டாள்.அவளைத்தொடர்ந்து அவளது தங்கை புஷ்பம்மாளும் வந்து சேர்ந்தாள்.
அந்த நாட்களில் அழகிய பெண் குழந்தைகளைக் கோயில்களுக்கு விற்பனை செய்யும் வழக்கம் இருந்தது. சில குடும்பங்களில் நோய்,பிரச்சனை,போரட்டங்கள் ஏற்படும்போது குடும்பத்தில் ஒரு பெண்குழந்தையைக் கோயில்களுக்குக் காணிக்கையாக வழங்கும் வழக்கமும் இருந்தது. கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்கள், தங்கள் குழந்தைகளை வளர்க்கப் போதிய வசதி இல்லாமல் போகும் போது, தங்கள் குழந்தைகளை கோயில்களுக்கு விற்று வந்தார்கள்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பெண்கள் கோயிலில் பாட வேண்டும், நடனமாட வேண்டும்,பூஜைக்கு உதவ வேண்டும்.அந்த அழகிய சிறுமிகளை கோயில் பூசாரிகளும், ஊர் பெரிய மனிதர்களும், சின்ன வயதிலிருந்தே தவறான வழிகளில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ப்ரீனா என்ற ஏழுவயதுச் சிறுமியும் ஒருத்தியும் விற்கப்பட்டாள். அவள் பெருங்குளத்தில் கோயில் பெண்களிடம் இருக்கும் போது எப்படியோ தப்பியோடி ஏமி அம்மாவுடன் சேர்ந்துவிட்டாள்.
அம்மாவும் ப்ரீனாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கிறிஸ்துவின் அன்பு அவர்களை நிறைத்தது.ஏமி அம்மா அவர்கள்,அவளைக் கட்டி அணைத்து மடியில் தூக்கி வைத்து முத்தமிட்டார்கள். ப்ரீனா அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அம்மாவுக்கும் ப்ரீனாவுக்கும் இடையில் அன்று மலர்ந்த அன்பு, இறுதி வரையிலும் நறுமணம் பரப்பி நின்றது.
வஞ்சகமான ஒநாய்களிடமிருந்து ப்ரீனா தப்பி வந்து, அம்மாவிடம் அடைக்கலம் தேடிக் கொண்டதிலிருந்து,ஏமி அம்மாவின் அன்பு உள்ளம் ப்ரீனாவைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுமிகளின் அவல நிலையை எண்ணி, எண்ணி காயப்பட்டு, கனத்துப் போயிருந்தது.ஏமி அம்மாவின் மனக் கண்கள் முன்பு கவலை தோய்ந்த முகத்துடன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதரிசனமானார். பச்சிளம் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பாவப் படுகுழிக்குள் தள்ளப்படுவதைத் தடுத்தே தீர வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் அளித்தே தீரவேண்டும் என்று ஏமி அம்மா உறுதி ஏற்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெளன்ட் டோனா என்ற ஜெர்மானியப் பிரபு ஒருவர், தென்னிந்திய ஊழியங்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கி வந்தார். 1824ம் ஆண்டில் இவர் ஒரு சிறிய கிராமத்தில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றினைக் கட்ட நிதி உதவி வழங்கினார்.இதனால் அங்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டது.
ஆலயத்தைச் சுற்றியுள்ள அந்தக் கிராமம் அவர் பெயரால் டோனாவூர் என்றழைக்கப்பட்டது! கர்த்தரின் ஆசீர்வாதத்தால் டோனாவூரில் இருந்த ஒரு குடும்பம் ஒன்று, பத்து, நூறு என்று நாளுக்கு நாள் பெருகி வந்தது!
இந்நிலையில் 1912ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி.ஏமி அம்மாவின் உள்ளத்தில் ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த லல்லா என்ற சிறுமி, திடீரென்று நோய்வாய்ப்பட்டாள்.ஏமி அம்மா அவளை அணைத்தவாறு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
அவளுடைய செய்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.சுற்றியிருந்த ஏமி அம்மா, பொன்னம்மாள், மேபல் வேட் இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள் லல்லா. அவர்களைத் தனித்தனியே முத்தமிட முயன்றாள். எங்கோ புறப்படுகிறவளைப் போலக் காணப்பட்டாள்.ஆம் ஒரு நொடியில் அவள் ஆண்டவரின் கரத்தினுள் இருந்தாள்.
ஆகஸ்டு மாதத்தில் இன்னுமொரு அதிர்ச்சி ! நற்செய்திப் பணிக்காக மசூலிப்பட்டினம் சென்றிருந்த போதகர்.தாமஸ் வாக்கர் அவர்கள், கடுமையான வயிற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
ஆகஸ்டு 24ம் தேதி போதகர்.தாமஸ் வாக்கர் அவர்கள் தமது ஒட்டத்தை, ஊழியத்தை முடித்துக் கொண்டார்.
Amy Carmichael
Amy Carmichael


இந்நிலையில், கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்படும் சிறுமிகளைப் போல, ஒழுக்கமற்ற வாழ்க்கை முறைகளில் ஈடுபடுத்தப்படும் சிறு பையன்களைப் பற்றி கேள்விப்பட்ட ஏமி அம்மா அவர்கள் அவர்களைக்குறித்து பாரம் கொண்டார்.மேலும், நல்ல அழகும், அறிவும், உடற்கட்டும் உள்ள சிறுவர்களை நாடகக் கம்பெனியார் ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். அவ்வப்போது,கோவில் பணிகளுக்கென்றும் சிறுவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தைஒன்று ஏமி அவர்களிடம் வந்து சேர்ந்தது.அவனுக்கு “அருள்” என்று ஏமி அம்மா பெயர் சூட்டினார்கள்.அடுத்து ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது பையனும் வந்தான். இரண்டு – மூன்றானது ! மூன்று முப்பது ஆனது ! முப்பது எழுபது ஆனது…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bible Festivals || Richard George Muller

  Festivals https://youtu.be/N1lPUXdqkco https://youtu.be/N1lPUXdqkco 1. பஸ்கா பண்டிகை    (Exodus 12:1-14 ; Leviticus 23:5) ஆபிப்   மாதம்  -...